அறுபடை வீடு – முருகனின் ஆறு படை வீடுகள்

0
திருப்பரங்குன்றம் - அறுபடை வீடு

அறுபடை வீடுகள்

புலவர் நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் தலை சிறந்த 6 கோவில்களை தேர்வு செய்து அதற்க்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார். பிற்காலத்தில் ஆற்றுப்படை ஆறு படை( அறுபடை வீடு ) என்று அழைக்கப்பட்டது.

1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி

முருகன், தெய்வானையை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றம்.

இந்த கோவில் அறுபடை வீடுகளில் முதலாவதாக உள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரையில் உள்ள ஒரு மலையில் உள்ள சிறிய கோவிலாகும். எப்பொழுதும் சிறிதளவு கூட்டத்துடனே காணப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழி தரிசனங்களும் உள்ளது.

2. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

திருச்செந்தூர் முருகன் - அறுபடை வீடு
திருச்செந்தூர்

சூரனை அழித்து வெற்றியோடு திரும்பிய இடம் திருச்செந்தூர்.

திருச்செந்தூரில் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த 2ஆம் படை வீடு மிகவும் அழகான இடத்தில அமைந்துள்ளது. கோவிலுக்கு வருவோர்கள் கடலிலும் குளித்து மகிழ்வர். கடலோர காற்று மற்றும் அமைதியான சூழல் நிலவும் இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிரித்து கொடுக்க பட்டது திருச்செந்தூர்.

3. பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி

பழனி மலை - அறுபடை வீடுகள்
பழனி மலை

ஞானபழத்திற்கு சண்டை போட்டு மலை மேல் ஏறிய முருகன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற இடம் என்றால் ஒன்று பழனி மலை மற்றொன்று கொடைக்கானல். அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இந்த மலை கோவிலில், புகை வண்டி மற்றும் ரோப் கார் போன்ற வசதிகள் உள்ளன நடந்து மலையேற முடியாமல் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவும். அனைத்து நாட்களிலும் இந்த கோவில் திறந்து இருக்கும்.

4. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி
சுவாமிமலை

தந்தைக்கு உபதேசம் செய்த இடம் சுவாமிமலை.

சுவாமிமலை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில், அதிக அளவு கூட்டம் இல்லாமல் நிம்மதியாக தரிசனம் செய்ய ஏற்ற இடம். சுவாமிமலை அறுபடை வீடுகளில் 4வது வீடாகும்.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி

திருத்தணி முருகன்
திருத்தணி

வள்ளியை திருமணம் செய்த இடம் திருத்தணி.

இக்கோவில் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ளது. திருத்தணி கோவில் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கும் இங்கு. திருத்தணி கோவில் அறுபடை வீடுகளில் 5வது வீடு.

6. பழமுதிர்ச்சோலை சுப்பிரமணிய சுவாமி

பழமுதிர்ச்சோலை சுப்பிரமணிய சுவாமி - அறுபடை வீடு
பழமுதிர்ச்சோலை

ஔவைக்கு முருகன் நாவல் பழம் கொடுத்த இடம் இது.

பழமுதிர்ச்சோலை மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான கோவில். இக்கோவில் அழகர் கோவிலின் அருகே அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் 6வது வீடு தான் பழமுதிர்ச்சோலை. பழமுதிர்ச்சோலை கோவில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ளது.

அறுபடை வீடுகள் எப்படி உருவாகின?

புலவர் நக்கீரர் தமிழ்நாட்டில் உள்ள 6 பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களை தேர்வு செய்து அதனை அறுபடை வீடு என்று அழைத்தார். இந்த 6 முக்கியமான கோவில்களும் சில முக்கியமான சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. அனைத்து கோவில்களின் கதைகளும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

1. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி – அறுபடை வீடு

தெய்வானையை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றம்.

சூரனை வென்று சூரசம்ஹாரம் முடிந்ததும் ஓய்வெடுக்க முடிவு செய்த முருகன் இந்திர தேவனிடம் எங்கே செல்லலாம் என்று ஆலோசனை கேட்டார். அவரோ உங்களுக்கு ஓய்வெடுக்க மிக சிறந்த இடம் பரங்குன்றம் என்ற மலையை காட்டினார். அங்கே சென்ற முருகன் தன்னுடன் பிரம்மன், பெருமாள், தேவேந்திரன் மற்றும் அனைத்து தேவர்களையும் அழைத்து சென்றார். அந்த மலை முருகனுக்கு மிகவும் பிடித்து போனது. அங்குள்ள சிவன் கோவிலுக்கு சென்ற முருகன் சிவனை வணங்கி கொண்டிருக்கும் போது இந்திரன் “உங்களுக்கு கல்யாண வயதாகிவிட்டது, எனக்கு ஒரு மகள் தெய்வானை இருக்கிறாள்” என்று கூறினார்.

தெய்வானை முருகனை திருமணம் செய்ய இருந்த தவம் குறித்து அறிந்த முருகன் இது சரியான நேரம் தான் திருமணத்திற்கு என்று கூறி தெய்வானையை தேவ லோகத்தில் இருந்து வரவழைத்து ஒரு திருவிழாவை போல இந்த திருமணம் நடந்தது. இதனால் தான் அறுபடை வீடுகளில் முதலாவதாக திருப்பரங்குன்றம் திகிழ்கிறது.

2. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி – அறுபடை வீடு

சூரனை அழித்து திரும்பி சென்ற இடம் திருச்செந்தூர்.

பிரம்மா, விஷ்ணு, இந்திரன் மற்றும் தேவர்கள் சிவ பெருமானை காண கைலாயம் வந்தனர். சூரன் தேவர்களை சிறை பிடித்து வைத்துள்ளான் என்ற புகாரை சிவ பெருமான் முன் வைத்தனர். இதை கேட்ட சிவன் தன் மகன் முருகனிடம் சக்தி வாய்ந்த வில்லை கொடுத்து, தேவர்களுடன் அனுப்பி வைத்து சூரனை அளித்து வர சொன்னார். அதை ஏற்ற முருகன் தேவர்களுடன் சென்றார். போருக்கு செல்லும் வழியில் நாரதர் முருகனிடம் சூரனை அழிக்கும் முன்பு அவன் தம்பி தரகாசுரனை அழிக்க வேண்டும் என்று ஆலோசனை கூற அதை ஏற்ற முருகன் முதலில் சுலபமாக சக்தி வாய்ந்த வில்லை வைத்து தரகாசுரனை கொன்று வென்றார்.

அடுத்து சூரபத்மனை அழிக்க சென்றார். சூரனும் நிறைய சக்தி வாய்ந்தவன் அதனால் சில நாள் போருக்கு பிறகு கோபமடைந்த முருகன் அப்பா கொடுத்த சக்தி வாய்ந்த வில்லை பயன்படுத்தி சூரனை இரண்டாக பிளந்தார். அப்போது சூரன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அதை ஏற்ற முருகன் பிளந்த அவன் உடலை மயில் மற்றும் சேவலாக மாற்றி தன்னுடன் வைத்து கொண்டார். இந்த போர் முடிந்து திருச்செந்தூர் வந்ததால் தான் திருச்செந்தூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

3. பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி – அறுபடை வீடு

பழத்திற்காக சண்டை போட்ட இடம் இது.

இந்த கதை மிகவும் சுவாரசியமானது. கைலாசத்தில் சிவன் பார்வதி விநாயகர் முருகர் அனைவரும் இருக்கும் போது நாரதர் ஒரு சக்தி வாய்ந்த ஞானப்பழத்தை சிவனுக்கு கொண்டு வந்தார். அப்போது அங்கிருந்த முருகன் மற்றும் விநாயகர் இருவரும் எனக்கு அந்த பழம் வேண்டும் என்று அடம்பிடிக்க சிவன் ஒரு யோசனை செய்தார்.

சரி இருவருக்கும் வேண்டாம், நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் வெல்வவர்களுக்கு இந்த பழம் என்று கூறினார்.

போட்டி என்னவென்றால் உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கு தான் இந்த பழம் என்று அறிவித்தார். அதை கேட்டு அனந்தமடைந்த முருகன், தன் மயில்வாகனத்தை எடுத்து புறப்பட்டார் உலகை சுற்ற. திரும்பி வந்து பார்க்கும் பொது அவருக்கு ஒரு அதிர்ச்சி.

விநாயகரோ எப்படி நம் வாகனமான மூஞ்சூறில் உலகை சுற்றி வருவது என்று நினைத்து கொண்டு இருக்கையில் ஒரு யோசனை வந்தது. நாரதரிடம் சென்று அனைத்தும் சிவமயம் என்றால் என்ன என கேட்க, நாரதரோ உலகிற்கே அம்மையப்பராக விளங்கும் சிவன் மற்றும் பார்வதி உலகில் அனைத்து இடங்களிலும் உள்ளனர் என்று கூறினார். அதை கேட்ட விநாயகர் தாய் தந்தையை சுற்றி வந்து போட்டியில் வென்று ஞானப்பழத்தை பெற்றார்.

பிறகு வந்த முருகன் இதை அறிந்து கோபமடைந்து தனது நகைகள் அனைத்தையும் கழட்டி எரிந்து விட்டு ஒரு ஆண்டியை போல சென்று ஒரு மலை (பழனி) மேல் நின்றார். அதனால் அவருக்கு பழனியாண்டி என்ற பெயரும் உண்டு. பிறகு வந்து அம்மா, தேவர்கள் அனைவரும் சமாதானம் சொல்லி அழைத்து சென்றனர். பழத்திற்காக ஆண்டியாக நின்ற அந்த மலையே பழனி மலையாக மாறியது.

4. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி – அறுபடை வீடு

தந்தைக்கு உபதேசம் செய்த இடம் தான் சுவாமிமலை.

முருகன், வீரபாகுவிடம் விளையாடி கொண்டிருக்கும் போது, அந்த வழியாக பிரம்மன் முருகனை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். இதனால் சினமுற்ற முருகன் பிரம்மனை அழைத்து பிரணவ மந்திரத்தை கேட்டார். அதை கூற தயங்கிய பிரம்மனை இது கூடவா தெரியாது என்று கூறி சிறையில் அடைத்தார். இதை அறிந்த சிவா பெருமான், சம்பவ இடத்திற்கு வந்து எந்த விசாரணையுமின்றி பிரம்மனை விடுவிக்க சொன்னார். அதற்க்கு எதிர் பேச்சு பேசாமல் முருகன் விடுவித்தார்.

அதற்க்கு பதிலாக, சிவனிடம் முருகன் பிரணவ மந்திரம் என்றல் என்ன என்று கேட்க அவரும் தெரியாததை போலவே நடித்தார். அப்போது முருகன் சிவனை கை கட்டி நிற்க சொல்லி பிரணவ மந்திரத்தை காதில் கூறினார்.

தந்தைக்கே உபதேசம் சொன்னதால் சுவாமிநாதர் என்ற பெயரும், கோவில் மலை மேல் இருப்பதால் சுவாமிமலை என்றும் பெயர் வந்தது.

5. திருத்தணி சுப்ரமணிய சுவாமி – அறுபடை வீடு

வள்ளியை கல்யாணம் செய்த இடம் இது.

நம்பிராஜன் என்ற ஒரு வேடன் இருந்தான். அவனுக்கு வள்ளி என்று ஒரு மகள், அவள் முருகனை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவோடு இருந்தால். அதை அறிந்த நாரதர் முருகனிடம் சென்று தகவல் கூறினார். இதை கேட்ட முருகன் வள்ளியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி வள்ளியிடம் சிறிய விளையாட்டு விளையாடினர்.

ஒரு வேடனை போல உருவத்தில் வள்ளி முன் சென்று நீ அழகாக இருக்கிறாய் அப்படி இப்படி என்று கிண்டல் செய்துள்ளார். இதை கேட்ட வள்ளி கோவத்தில் இருந்தார். வள்ளியின் தந்தை வருவதை அறிந்த முருகன் ஒரு மரமாக மாறிவிட்டார். அவர் சென்றவுடன் மீண்டும் ஒரு அழகிய இளைஞனாக தோன்ற வள்ளி இப்படி எல்லாம் வித்தை செய்தாலும் நான் அஞ்ச மாட்டேன் என கோவத்தை காட்டியதால் முருகன் மறைந்து விட்டார்.

பின்பு முருகன் அண்ணன் விநாயகரிடம் உதவி நாடினர். அதை ஏற்ற விநாயகர் யானை போல வந்து வள்ளியை பயன்படுத்தினார். முருகன் ஒரு கிழவரை போல வந்து வள்ளியை காப்பாற்றினார். இதை கண்ட வள்ளி என்ன பரிசு வேண்டும் என கேல் தாத்தா என்று கூற, கிழவரோ உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அதற்க்கு கோவமாக பதிலளித்த வள்ளி நான் முருகனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டவுடன் உண்மையான தோற்றத்தை முருகன் வள்ளியிடம் காட்டினார்.

அப்புறம் என்ன வள்ளியுடன் 2வதாக கல்யாணம் தடபுடலாக திருத்தணியில் நடந்தது.

6. பழமுதிர்ச்சோலை சுப்ரமணிய சுவாமிஅறுபடை வீடுகள்

ஔவையாருக்கு நாவல் பழம் கொடுத்த இடம் இது.

ஔவையார் முருகன் மேல் அதிக பக்தி கொண்டவர். அவரை பற்றி நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு நாள் மதுரை அருகே சென்று கொண்டிருக்கும் போது நீண்ட தூரம் நடந்த வந்த களைப்பில் ஒரு மரத்தடியில் சென்று அமர்கிறார். அப்போது மேலே ஒரு சிறுவன் இருந்தான். இதை கண்ட ஔவை சிறுவா நீ இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்க அச்சிறுவன் நான் ஆடு மேய்க்க வந்தேன் இங்குள்ள நாவல் பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்று பறிக்க வந்தேன் என்று கூறியுள்ளான்.

பின்பு உனக்கும் ஒரு பழம் தரவா என்று முருகன் கேட்க அதற்கு ஔவை ஞானபலமாய் முருகன் இருக்கையில் எனக்கு எதற்கு நாவல் பழம் என்று மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் சிறுவன் கேட்க கடைசியில் ஒப்புக்கொண்ட ஔவை சரி கொடு என்று கேட்க அதற்க்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா இல்லை சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான். அதற்க்கு அர்த்தம் தெரியவில்லை ஔவைக்கு, அதை அவனிடம் காட்டாமல் சுடாத பழம் என்று கூற, சிறுவன் மரத்தை ஆட்டினான். அப்போது கீழே விழுந்த பழத்தை எடுத்து மண்ணை ஊதிவிட்டு சாப்பிட முயன்ற போது, உனக்கு நான் சுடாத பழம் தானே கொடுத்தேன் ஏன் ஊதி சாப்பிடுகிறாய் என்று கேட்டான் அச்சிறுவன்.

இதை கண்ட ஔவைக்கு நீ மிகுந்த புத்திசாலியாக இருக்கிறாயே நீ யார் என்று மீண்டும் மீண்டும் கேட்க, அச்சிறுவன் சிரித்து கொண்டே முருகனாய் மாறியது ஔவையை வியப்பில் ஆழ்த்தியது. ஔவை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நாவல் பழத்தின் மூலம் தான் பழமுதிர்ச்சோலை கோவில் உருவாகியது.

ஆறுபடை வீடுகளின் வரைபடம்

அறுபடை வீடு வரைபடம்
அறுபடை வீடு வரைபடம். நன்றி – கூகிள் மேப்ஸ்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் விருப்பங்களை கீழே பதிவிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here