உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்கள்

0

உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்

திருமூர்த்தி மலை

உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்களில் முதலில் பார்க்க வேண்டியது திருமூர்த்தி மலை தான். உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருமூர்த்தி அணை, சிறுவர்கள் நீச்சல் குளம், சிறிய பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு திருமூர்த்தி மலைக்கு பெருமையை சேர்க்கிறது.

பஞ்சலிங்க அருவிக்கு பொதுவாக காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை அனுமதி உண்டு. அங்கு சென்று குளிக்கலாம். அமணலிங்கேஸ்வரர் கோவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சிறுவர் பூங்கா காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

அமராவதி அணை

அமராவதி அணை உடுமலையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை சுமார் 100 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. அதில் ஏறி மேலே சென்று இயற்கையை ரசித்தால் உங்கள் அணைத்து கவலைகளும் பறந்து ஓடி விடும்.

அருகிலேயே முதலை பண்ணை, பெரிய பூங்கா, மீன் கடைகள் எல்லாம் உங்கள் பொழுதை மேலும் அழகாக்கும். இந்த இடத்திற்கு வர பேருந்தை விட சொந்த வாகனம் சரியாக இருக்கும்.

சின்னார்

உடுமலையில் இருந்து சின்னார் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகும். மொத்தம் 38 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சின்னார் தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ளது. சின்னாரில் இருந்து உள்ளே ஒரு 2 கிலோ மீட்டர் சென்றால் ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது.

இதற்கு உங்கள் வாகனங்களில் செல்ல முடியாது. உங்கள் வாகனத்தை சின்னாரில் நிறுத்தி விட்டு, அங்கு செல்லும் அனுமதி பெற்ற வேன்களில் நீங்கள் மேலே செல்லலாம். மேலே சென்றவுடன் கோவில் மற்றும் சின்னார் ஆறு உள்ளது. முதலில் சின்னார் ஆற்றில் குளித்து விட்டு வந்து கோவிலில் தரிசனம் செய்து கொண்டு உங்கள் நாளை இனிமையாக்கலாம்.

தூவானம் அருவி

தூவானம் அருவி சின்னாரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு சென்று தங்கவும் முடியும். காட்டுக்குள் தங்குவது மற்றும் அருவியில் குளிப்பதற்கு என அனைத்திற்கும் கேரள வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.

முதலை பண்ணை

அமராவதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் முதலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு சுமார் 100 முதலைகள் வளர்க்க படுகின்றன. இங்கே சொந்த வாகனங்களில் செல்வது தான் சிறப்பானது. ஏனெனில் பேருந்து வசதி அமராவதியில் இருந்து மிகவும் குறைவாகவே உள்ளது. உடுமலையில் இருந்து கல்லாபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் அமராவதி முதலை பண்ணைக்கு செல்லும். அனால் ஒரு நாளைக்கே 4 பேருந்துகள் தான் அமராவதி வழியே கல்லாபுரம் செல்லும். உடுமலைப்பேட்டை சுற்றுலா தலங்களில் முக்கியமான இடம்.

உடுமலை திருப்பதி

உடுமலையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உடுமலை திருப்பதி 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்டு மிக பிரம்மாண்டமான அளவில் திறக்கப்பட்டது. பின், உடுமலையில் ஒரு மிக முக்கியமான கோவில் தலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள்.

இயற்கையான கல்லாபுரம்

கல்லாபுரம் மிகவும் செழிப்பான மற்றும் இயற்கையான கிராமம். உடுமலையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கல்லாபுரத்தை காண அமராவதி வழியாகவும் வரலாம். இங்கு பெரிதாக சுற்றுலா தளங்கள் எதுவும் இல்லை எனினும், இந்த ஊரை சுற்றியுள்ள அணைத்து இடங்களும் நம் கண்ணிற்கு கொள்ளை அழகை தரும். இங்க பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. திரைப்பட தளம் என்றே ஒரு பாறை உள்ளது கல்லாபுரத்தில். ஆகையால் இதுவும் உடுமலைப்பேட்டை சுற்றுலா தலத்தில் ஒரு பகுதி ஆகும்.

காந்தளூர் அருவி

சின்னாரை அடுத்துள்ள மறையூரில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் உள்ள சென்றால் மிகவும் அமைதியான மற்றும் மலைகளுக்கு நடுவே அழகிய தோற்றமளிக்கும் காந்தளூர் அருவி கேரள எல்லைக்கு உட்பட்டது. இந்த அருவி அதிகம் யாருக்கும் தெரியாத காரணத்தால் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும். காந்தளூர் கிராமத்தில் வண்டிகளை நிறுத்தி விட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் கீழே இறங்கி செல்ல வேண்டும் இந்த அருவிக்கு. அந்த ஒரு கிலோ மீட்டர் பாதை மிகவும் அற்புதமானதாக காடுகளுக்குள்ளயே அமைந்து இருக்கும்.

அருகில் உள்ள வேறு சுற்றுலா இடங்கள்

பொள்ளாச்சி

கோவை மாவட்டத்தில் மிக முக்கியமா சுற்றுலா தளம் என்றால் அது பொள்ளாச்சி தான் என்று அனைவரும் சொல்வர். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழி அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்றிருக்க வேண்டும். அவ்வளவு அழகாக மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் அந்த பாதை உடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடும்.

பழனி முருகன் மலை

உடுமலையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முருகனின் 3ஆம் படை வீடு தான் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்த கோவிலின் மொத்த உயரம் 160 மீட்டர் மற்றும் 690 படிகளை கொண்டுள்ளது. தை பூசம் மற்றும் பங்குனி உத்திரம் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் பிரம்மாண்டமான அளவில் நடக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க, Read This Article In English.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here